There were 1,129 press releases posted in the last 24 hours and 391,501 in the last 365 days.

ஈழவேந்தனின் மறைவு தமிழீழவிடுதலைப்போராட்டத்திற்கு மீட்க முடியாத பேரிழப்பு - ருத்ரகுமாரன்

அமைதியாக உறங்குங்கள், ஐயா. காலம் உங்கள் கனவை நனவாக்கும். ஈழத் தமிழர் தேசம் தனது விடுதலையை வென்றெடுக்கும். தமிழீழம் உலக நாடுகளில் ஒன்றாகி வரலாறு படைக்கும்.

TORONTO, CANADA, May 3, 2024 /EINPresswire.com/ --

தமிழீழத் தேசிய விடுதலைப்போராளியும். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினரும், இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈழவேந்தன் அவர்கள் காலம் ஆகிய செய்தி நம்மையெல்லாம் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

அவருக்கு சிரம் தாழ்த்தி எமது மரியாதை வணக்கத்தை தெரிவிப்பதுடன், அவரின் பிரிவினால் துயருறும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களுடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் தன்னை இணைத்துக் கொள்கிறது.

எமது விடுதலைப்போராட்டத்தின் முக்கிய பங்காளியாகவும் விம்பமாகவும் அவர் இருந்து வந்துள்ளார். போராட்டத்தின் அறிவுநிலை நின்றதொரு போராளியாவார். தமிழ் மக்களின் போராட்டத்தின் தகவற் களஞ்சியமாகவும் விளங்கியவர் அவர். தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு மட்டுமன்றி, தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ் பண்பாட்டின் செழிப்புக்கும் தன்னை அர்ப்பணித்து உழைத்தவர் அவர். தமிழன் என்ற பெருமையுடனும், உணர்வுடனும் வாழ்ந்து வந்த ஒரு பேராளுமை அவர்.

ஈழவேந்தன் அவர்கள் அனைத்துலக அரசியல் அறிவு மிக்கவர். பெரும் மொழிப்புலமை கொண்டவர். உலகத்தலவர்கள் பலரைச் சந்தித்து தமிழ் மக்களின் தேசிய விடுதலைப்போராட்டத்தின் நியாயங்களை எடுத்துரைத்தவர். இவர் சந்தித்த உலகத் தலைவர்களில் முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, முன்னாள் கனடா பிரதமர் ஸ்டீபன் கார்பர், முன்னாள் மொரிசியஸ் வெளியுறவு அமைச்சர் மடன் டூலோ ஆகியோரும் உள்ளடங்குவர். இந்திரா காந்தி அம்மையாரைச் சந்தித்தபோது இந்திய நாட்டின் பாதுகாப்பும் தமிழீழ தேசத்தின் விடுதலையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது என்பதனை ஈழவேந்தன் எடுத்துரைத்திருந்தார். இதனை உலகத் தலைவர்கள் பலருக்கும் கூறுமாறு அப்போது இந்திரா காந்தி அம்மையார் இவரிடம் தெரிவித்திருந்தார். இந்திரா காந்தி அம்மையார் காலத்தின் பின் தனது தமிழீழ விடுதலை ஆதரவுச் செயற்பாடு காரணமாக இந்தியாவில் இருந்து இவர் நாடு கடத்தப்பட்டார். ஈழத் தமிழ் மக்கள் இந்தியாவுடன் இணைந்த நலன்கள் அடிப்படையில் கைகுலுக்கத் தயாராக உள்ளார்களேயன்றி காலில் வீழ்ந்து அடி பணியத் தயாரகவில்லை என உறுதியாக எடுத்தியம்பியவர் அவர். இதுவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு என்பதனையும் இங்கு பதிவு செய்து கொள்கிறேன்.

ஈழ வேந்தன் அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தகவற்களஞ்சியமாக விளங்கியது மட்டுமல்ல, பல நூல்களையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவ் ஆக்கங்கள் பாதுகாப்பாகப் பேணப்பட வேண்டும் என்பதிலும் அவர் பெரும் அக்கறை கொண்டிருத்தார். இதனை அவர் என்னோடு பேசும்போதும் கூறியுள்ளார். இரண்டு வாரங்களின் முன்னர், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்டிருந்த நிலையில் பேசும் போதும் இவ் அக்கறையினை அவர் வெளிப்படுத்தினார். இவ் விடயம் குறித்து உரிய ஏற்பாடுகளை செய்வது நமது கடமையாக அமையும்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தீர்க்கமான பாத்திரத்தை வகிக்கும் என ஈழவேந்தன் உறுதியாக நம்பினார். அவர் எந்த நிகழ்வுகளில் பங்கு கொண்டாலும், அது அரசியல் நிகழ்வாக இருந்தாலும் சரி, சமூக நிகழ்வாக இருந்தாலும் சரி, திருமணம் போன்ற குடும்ப நிகழ்வுகளாக இருந்தாலும் சரி, ஈழத் தமிழர் தேசத்தின் விடுதலை குறித்தும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் குறித்தும் அவர் ஓயாது உரையாடுவார் என பலர் கூறக் கேட்டுள்ளேன். ‘ஈழம் வல்லும். அதைக் காலம் சொல்லும்’ எனக் காலத்தை முன்னுணர்ந்து உரைத்து நின்றவர் அவர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினராக 2010 இல் அரசாங்கம் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து தொடர்ச்சியாக உழைத்து வந்தவர் அவர். குரலற்ற மக்களின் குரலாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒலிக்கும் என அவர் முழங்கினார்.

ஈழவேந்தன் ஐயாவுக்கும் எனக்குமிடையே நெருக்கமான தொடர்பும் உறவும் இருந்தது. நாம் அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொள்வோம். அவர் என்னைத் தனது மகன் போலவே கருதினார். நானும் அவரை ஒரு அப்பாவாகவே உணர்ந்தேன். அவரது அன்பும் வாஞ்சையுடன் உரையாடும் பாங்கும் என்றும் எனது நினைவுகளில் நிலைத்திருக்கும். அவர் உரையாடும் வேளைகளில் எமது நிலங்களை சிங்கள ஆக்கிரபிப்பில் இருந்து பாதுகாக்க ஏதாவது செய்தாக வேண்டும் எனத் துடிப்பார். விடுதலை நெருப்பை அணைய விடாது பாதுகாக்க வேண்டும் என வேண்டுவார்.

தமிழீழ விடுதலைக் கனவைத் தனது நெஞ்சினில் சுமந்து 50 வருடங்களுக்கும் மேலாக ஓயாது உழைத்த மாமனிதர் அவர். நாம் அவருக்கு செலுத்தக்கூடிய உண்மையான வணக்கம் என்பது, தமிழீழ விடுதலைக்கனவு தீயாக மட்டுமன்றி. ஓர் எரிமலையாகக் கனன்று தமிழ் மக்களின் விடுதலையை வென்றெடுப்பதன் ஊடாகவே அமைய முடியும்.

அமைதியாக உறங்குங்கள், ஐயா. காலம் உங்கள் கனவை நனவாக்கும். ஈழத் தமிழர் தேசம் தனது விடுதலையை வென்றெடுக்கும். தமிழீழம் உலக நாடுகளில் ஒன்றாகி வரலாறு படைக்கும்.

தமிழரின் தலைவிதி தமிழரின் கையில்
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Transnational Government of Tamil Eelam
TGTE
+1 614-202-3377
r.thave@tgte.org
Visit us on social media:
Facebook
Twitter
Instagram